search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவையும் இந்தியாவையும் திருப்திப்படுத்தவே எங்கள் மீது நடவடிக்கை - ஹபீஸ் சயீத்
    X

    அமெரிக்காவையும் இந்தியாவையும் திருப்திப்படுத்தவே எங்கள் மீது நடவடிக்கை - ஹபீஸ் சயீத்

    அமெரிக்காவையும் இந்தியாவையும் திருப்திப்படுத்தவே தங்கள் இயக்கம் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹபீஸ் சயீத் கூறியுள்ளார். #HafizSaeed #pakistan
    இஸ்லாமாபாத்:

    மும்பை தாக்குதலுக்கு முறையாக செயல்படும் ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக சமீபத்தில் ஐ.நா. அறிவித்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் தவிர லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    இதேபோல் ஐ.நா. பட்டியலில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளை பாகிஸ்தான் அரசும் தடை செய்ய வேண்டும், ஹபீஸ் சயீதை தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. இதையடுத்து, பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. ஹபீஸ் சயீத்தின் மத போதனை மையங்கள் மற்றும் மருத்துவ மையங்களை பாகிஸ்தான் கைப்பற்றியது.

    இந்த திடீர் நடவடிக்கை குறித்து ஹபீஸ் சயீத் கூறுகையில், அமெரிக்காவையும் இந்தியாவையும் திருப்திப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அரசு தனது இயக்கம் மீது தீவிர நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்தார். சட்டத்தின் பெயரில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

    ‘எங்கள் பள்ளிகள், மருத்துவ மையங்கள் மற்றும் பிற சொத்துக்களை அரசு கைப்பற்றி உள்ளது. இந்த நடவடிக்கையானது, பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து, ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு பகுதிகளில் எங்களது நிவாரணப் பணிகளை கடுமையாக பாதிக்கும். கடினமான இந்த நேரத்தில் இயக்கத்தில் உள்ளவர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்றும் சயீத் கூறியிருக்கிறார். #HafizSaeed #pakistan #India #US #tamilnews
    Next Story
    ×