search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் அதிபர் ஜேக்கப் ஜூமா
    X

    தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் அதிபர் ஜேக்கப் ஜூமா

    தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஜனாதிபதியாக ஜேக்கப் ஜூமா பதவி வகித்து வருகிறார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், தலைமையை மாற்ற கட்சி திட்டமிட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் எதற்கும் பிடிகொடுக்காத ஜூமா, தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

    இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதியான சிரில் ராமபோசா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் 2019 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிகிறது. ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணம், ஜேக்கப் ஜூமா தேர்தலுக்கு முன் பதவி விலக வேண்டும் என்பதுதான்.

    ஜேக்கப் ஜூமா மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவரை உடனடியாக பதவி விலக வைப்பது தொடர்பாக துணை ஜனாதிபதி ராமபோசா பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். திங்கட்கிழமை இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் பதவி விலகுவதாக தெரியவில்லை.

    இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, கட்சியின் தேசிய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் ஏஸ் மகாஷுலே தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜேக்கப் ஜூமா தனது ஜனாதிபதி பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை அவரே தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணைஜனாதிபதி சிரில் ராமபோசா இன்றோ, நாளையோ அதிபராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. #SouthAfrica #PresidentJacobZuma #SAPresidentresigns #tamilnews
    Next Story
    ×