search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுட்கால தடையா? பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு
    X

    தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுட்கால தடையா? பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு

    பனாமா கேட் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விதிப்பது மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதனால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால், தேர்தலில் நிற்கவும் தடை உள்ளது. ஆனால் இந்தத் தடை தற்காலிகமான ஒன்றா அல்லது நிரந்தரமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.



    நவாஸ் ஷெரீப்பைப் பொறுத்தமட்டில் அவர் அந்த நாட்டின் அரசியல் சாசனம் பிரிவு 62 (1)(எப்)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த சட்டப்பிரிவு, தகுதி நீக்கம் எவ்வளவு காலத்துக்கு என்பதை குறிப்பிடவில்லை.

    இது தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் 17 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார், நீதிபதிகள் ஷேக் அஸ்மத் சயீத், உமர் அட்டா பாந்தியால், இஜாசுல் அசன், சஜாத் அலி ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் அட்டார்னி ஜெனரல் ஆஜராகி வாதிடுகையில், “தகுதி நீக்கம் எவ்வளவு காலத்துக்கு என்பதை அரசியல் சாசனம் குறிப்பிடாத நிலையில், அதை பாராளுமன்றம்தான் தீர்மானிக்க முடியும்” என குறிப்பிட்டார்.

    தலைமை நீதிபதியோ, “அரசியல் சாசனத்தில் தகுதி நீக்க கால கட்டம் பற்றி குறிப்பிடவில்லை என்றால் அதை ஆயுட்கால தடை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், வழக்கின் விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×