search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா லண்டனில் கைது: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு
    X

    விஜய் மல்லையா லண்டனில் கைது: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு

    வங்கிக்கடன் மோசடி தொடர்பாக தலைமறைவாக இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறார்.
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இதனால், சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்தது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்று விட்டார். லண்டனில் தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

    அத்துடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்தியா வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அவற்றை பிரிட்டன் வெளியுறவுத்துறை சமீபத்தில் சரிபார்த்து ஒப்புதல் அளித்தது.


    இந்நிலையில், லண்டனில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனவே, கோர்ட் நடைமுறைகள் முடிந்ததும், விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×