
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பா.ஜனதாவிடம் இருந்து 3 தொகுதிகளை கைப்பற்றியது.
பாராளுமன்ற தேர்தலில் இதே நடைமுறையை தொடர காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. அதற்காக உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு அடுத்த படியாக செல்வாக்கு மிக்க கட்சிகளாக திகழும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
செல்வாக்கு மிகுந்த 24 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்படுகிறது. அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், பரபான்டு, தவுகாரா, பிரதாப்கர், கான்பூர், உன்னாவோ, குஷிநகர், மொராதாபாத், பிரெய்லி, லக்னோ, வாரணாசி, அலகாபாத், பருகாபாத், ஷரன்பூர், ஜான்பூர், மதுரா, பைசாலாபாத் மற்றும் பதேலுர் சிக்ரி போன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற இந்த தொகுதிகளை குறிவைத்துள்ளது.
எதிர் கட்சிகளுடன் சேர்ந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சி முடிந்துவிட்ட நிலையில் அதற்கான இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் தான் அறிவிக்க வேண்டும் என உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் முடிவுகளை பொறுத்து மெகா கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congress