
புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தொற்று நோய் பாதிக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதேபோன்று கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் தொற்று நோய் பாதிக்காமல் இருப்பதற்கு கேரள அரசிற்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில்முதல் தவணையாக ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்களும் 2-வது தவணையாக ரூ.1.20 கோடி மதிப்பில் 1.5 லட்சம் குளோரின் மாத்திரைகள், பாம்பு கடி மருந்துகள், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இன்சுலின் மருந்துகள் 100 டன் கிரிமி நாசினிகள் அனுப்பப்பட்டுள்ளது.
3-வது தவணையாக தற்போது ரூ.1.5 கோடி மதிப்பில் 500 டன் பிளிச்சிங் பவுடர் உள்ளிட்ட கிரிமி நாசினிகள் அனுப்பப்பட உள்ளது.
மேலும் தமிழகத்திலிருந்து 10 பூச்சியியல் வல்லுனர்கள் கேரளாவிற்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இதே போன்று தமிழகத்தின் எல்லையோர கேரள பகுதிகளில் தமிழக அரசு சார்பில் 40 மருத்துவ குழுக்கள், 322 மருத்துவ முகாம்கள் அமைத்து இதுவரை 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள தாய்ப்பால் வங்கி திட்டத்தை ஆஸ்திரேலியா நாட்டினர் வியந்து பாராட்டினர். மேலும் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் தங்களுடைய மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் புளூவேல் மற்றும் மோமோ சாலன்ஜ் ஆகிய விளையாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் மன மருத்துவ கொள்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு மற்றும் தாலுகா மருத்துவமனை ஆகியவற்றில் மனநல சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. அதற்கான புதிய மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #AirAmbulance