
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:- அ.தி.மு.க. அரசு செய்கிற ஊழலுக்கு பா.ஜ.க. துணை நிற்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- ஊழலின் மொத்த உருவம், குத்தகை தி.மு.க.தான். எனவே அவர்கள் ஊழல் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. உலக அளவில் சிறந்த நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஊழலுக்காக இந்தியாவில் கலைக்கப்பட்ட ஆட்சி என்றால், அது தி.மு.க. ஆட்சி தான்.
இன்றைக்கு அனைத்து ஒப்பந்தங்களும் முறைப்படி செயல்படுத்தப்படுகின்றன.
கேள்வி:- மக்களை காக்க வேண்டிய இரட்டை குழல் துப்பாக்கி (பா.ஜ.க.- அ.தி.மு.க.) மக்களை நசுக்குகிறது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- எங்களை பொறுத்தவரையில் இரட்டை குழல் துப்பாக்கியோ, ஒற்றை துப்பாக்கியோ என்பதில் நம்பிக்கை இல்லை. தி.மு.க.வின் வாரிசு தான் கனிமொழி. அவர்களுக்கு தான் துப்பாக்கி, சோடா பாட்டில், கத்தி, அரிவாள் போன்றவை கை வந்த கலை. எனவே அவர்கள் அந்த பாஷையில் தான் பேசுவார்கள்.
கேள்வி:- அ.தி.மு.க. அரசு திமிராக இருக்கிறது என்று கமல்ஹாசன் சொல்லி இருக்கிறாரே?
பதில்:- அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. திடீரென்று ‘டுவிட்டர்’, ‘யூடியுப்’, முகநூலில் வருவார். அடுத்தகட்டமாக எஸ்.எம்.எஸ்-ல் வருவார். அதற்கு அப்புறம் ஆளே இருக்க மாட்டார். கட்டெறும்பு சிற்றெறும்பாகி, அது காணாமல் போன எறும்பாக தான் ஆகும்.

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் அனுமதி தரவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறி இருக்கிறாரே?
பதில்:- விஜயகாந்த் அவருடைய(கருணாநிதி) வீட்டின் முன்பு சென்று சத்தியாகிரகம் பண்ணட்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Minister #Jeyakumar #Kamalhassan