
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உ.பி,. முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாகவே விசாரிக்க முன்வந்தது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்-ஐ உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதைதொடர்ந்து, இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார்-ஐ நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை லக்னோ நீதிமன்ற நீதிபதி முன்னர் இன்று ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குல்தீப் சிங் சென்காரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் தங்களது விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதைதொடர்ந்து, லக்னோ நகரில் உள்ள சி.பி.ஐ. வட்டார அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் கட்டமாக மருத்துவ பரிசோதனைக்காக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews #unnaocase #KuldeepSingh