
புதுடெல்லி:
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் நினைவு மணடபத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். அந்த இடம் மகாபரிநிர்வான பூமி என அழைக்கப்படுகிறது. அம்பேத்கரை போற்றும் வகையில் அந்த இடத்தில் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
நாளை அம்பேத்கரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நினைவு மண்டபத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்பணித்தார்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மோடி டெல்லி மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளார். அதற்காக லோக் கல்யாண் மார்க் ரெயில் நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிவரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது பொதுமக்கள் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். அவர்களுடன் உரையாடியவாறு மோடி பயணம் செய்தார். #PMModi #Metrotraintravel #DrAmbedkarNationalMemorial