
தமிழ்நாட்டில் விதிகளை மீறி ஆற்றுப்படுகைகளில் அதிக அளவு மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டது.
அது மட்டுமின்றி தனி நபர்கள் செய்த மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு வருவாயை மணல் கொள்ளையால் தமிழகம் இழந்துள்ளது.
பிரபல தொழில் அதிபர் சேகர்ரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு மணல் விற்பனை விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதையடுத்து ஆற்று மணல் விற்பனையை தமிழக அரசே ஏற்றது. 7 இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டன.
மணல் விற்பனையில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ஆன்லைன் மூலம் மணல் விற்கும் திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார். என்றாலும் அரசு மணல் குவாரிகளில் இருந்து மணலைப் பெற லாரி ஓட்டுனர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு லாரி மணல் பெற 5 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது.
இதன் காரணமாக மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. உரிய நேரத்தில் மணல் கிடைக்காத காரணத்தால் கட்டிடம் கட்டுமான பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உதாரணமாக சென்னை மாநகருக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் யூனிட் மணல் தேவை.
ஆனால் அந்த அளவு மணல் கிடைக்காததால் கட்டுமானப் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் மணல் குவாரிகளை திறக்கப் போவதாக கடந்த ஆண்டு நவம்பர் 22-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கிடையே எம்.சாண்ட் எனும் செயற்கை மணல் மூலம் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருந்து மணல் கொண்டு வர முயன்றனர்.
மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு மணல் கொண்டு வந்து இறக்கப்பட்டது. ஆனால் அந்த மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எடுத்து சென்று வினியோகம் செய்ய தமிழக அரசு அதிகாரிகள் தடை விதித்தனர்.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க கோரி புதுக்கோட்டை மாவட்டம் எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமையா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி அரங்க.மகாதேவன், இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழக அரசின் கனிமவளச் சட்டப்படி மனுதாரர் இறக்குமதி செய்துள்ள மணல் தொழிலக பயன்பாட்டிற்கான மணல் (தாது மணல்) என்ற வரையறைக்குள் வருவதால்தான் மணலை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 45 மெட்ரிக் டன் மணலை வாங்கிய பாளையங்கோட்டையைச் சேர்ந்த மரிய ஆண்டனியும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் வாதிடுகையில் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் மணல் கடத்தல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோத மணல் கடத்தலை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலாக இருந்தாலும் அவை மாநில விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அரசு வக்கீல் வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்ற தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதனால் மணல் விற்பனைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. #TamilNews