
புதுடெல்லி:
கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டியனை நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது.
ஆனால் பெரியபாண்டியனை சுட்டது சக போலீசான முனிசேகர் என்பது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளி நாதுராமை கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து நாதுராம் தலைமறைவாக இருப்பதாக ராஜஸ்தான் போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தில் பதுங்கியிருந்த நாதுராமை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் மாநில தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த தகவலை பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நாதுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. #Nathuram #Periyapandianmurder #ArrestedinGujarat