
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற தேர்தலின்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் முடிந்து நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதையடுத்து விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.20 கோடியை தள்ளுபடி செய்து அரசு அறிவிப்பு செய்தது. இதற்கான கோப்பு கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் அந்த கோப்பிற்கு அனுமதி தராமல், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த கோப்பை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசின் சொந்த நிதியில் கடனை தள்ளுபடி செய்து கொள்ளலாம் என்று கூறி மீண்டும் கோப்பை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. இதன் பின்னரும் கவர்னரிடம் ஒப்புதல் கிடைக்காமல் கோப்பு கிடப்பில் கிடந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனந்தராமன் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து இலவச அரிசி, துணி, பொங்கல் பொருட்கள், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கும்படி கோரினர்.
இதையடுத்து இலவச பொங்கல் பொருள், துணி வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து தற்போது விவசாய கடன் தள்ளுபடிக்கும் கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணை நேற்று இரவு வெளியிடப்பட்டது. இத்தகவலை அமைச்சர் கந்தசாமி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டாக கடும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண், அதை சார்ந்த தொழில்களுக்காக விவசாய கூட்டுறவு வங்கி, சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்களை அவர்களால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிக்கவும், அவர்கள் புதிய கடன்களை பெற்று விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளவும், வேளாண் கூட்டுறவு கடன் நிறுவனங்களிடம் இருந்து 31.3.2016 தேதி வரையில் விவசாயிகளால் பெறப்பட்ட அசல், வட்டி, அபராத வட்டி, பிற கட்டணங்கள் சேர்த்து ரூ.19.42 கோடி நிலுவைத்தொகையை தள்ளுபடி செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் புதுவை யூனியனில் 4 ஆயிரத்து 94 விவசாயிகள் பயன் பெறுவார்கள். அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனடையும் விவசாயிகளின் விபர பட்டியல் அந்தந்த விவசாய கூட்டுறவு சங்கம், வங்கி, மாநில கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு நிலவள வங்கி, வங்கி கிளைகளில் பார்வைக்கு ஒட்டப்படும். பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றாலோ, தள்ளுபடி சரியாக கணக்கிடப் படவில்லை என்றாலோ பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் கடன்பெற்ற வங்கிகளில் நேரடியாக முறையீடு செய்யலாம்.
குறுகிய கால கடன், மத்திய கால கடன் சம்பந்தமாக முறையீடுகளுக்கு மேலாண் இயக்குனர், மாநில கூட்டுறவு வங்கியையும், நீண்டால கடன்களுக்கு வேளாண் இயக்குனர், மத்திய கூட்டுறவு நில வள வங்கியையும் அணுக வேண்டும். விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக இந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Puducherry #tamilnews