
சென்னை:
ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ காட்சியை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 20-ந் தேதி வெளியிட்டார். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் புது வண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திலும் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் தன்னை போலீசார் கைது செய்து விடக்கூடாது என்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில், வெற்றிவேல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வெற்றிவேல் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெற்றிவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, வெற்றிவேல் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். 2 வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். #tamilnews #Vetrivel #Jayavideoissue