
புதுடெல்லி:
எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் மாநில மற்றும் யூனியன் பிரதேச மந்திரிகளின் மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டாக இருந்த ஒரு நாளைய சராசரி மின் நுகர்வு, 2017-ம் ஆண்டில் 320 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இந்த மின்தேவை 15 ஆயிரத்து 500 மெகாவாட் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013-14-ம் ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 985 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பு கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 787 கோடியாக குறைந்துள்ளது. இந்த இழப்பானது 2016-17-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட விவரங்களின்படி ரூ.1,400 கோடி குறைந்துள்ளது. இழப்பே இல்லாத நிலையை எட்ட தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஏதுவாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4-ன் மொத்த மின் உற்பத்தியான 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே ஒதுக்கீடு செய்யவேண்டும்.
செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்தை, அமல்படுத்த தேவையான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் தேவைக்காக பிரத்யேகமாக ஒரு நிலக்கரி தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.