search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
    • 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் ரெட்மி பேட் SE மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாடலில் 11 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     


    கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த டேப்லெட் கிராபைட் கிரே மற்றும் லாவெண்டர் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படஹ்ட்தின் மூலம் தான் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது.
    • அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும்

    மதம், கடவுள்களை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு - இப்படிப் பிரச்சாரம் செய்தவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்புகள் வெளிவந்ததுண்டு; ஆனால், பிரதமர் மோடி, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். எதிர்க்கட்சிகளும் நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் செல்ல முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

    அவ்வறிக்கையில், "இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி). அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், அத்தேர்தல் சட்டப்படி செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் - பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.

    நாடாளுமன்றத்தின் 18 ஆவது பொதுத் தேர்தல் தொடங்கிய நிலை முதல் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் இராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதவர்கள் ஹிந்துவிரோதிகள் என்று, கடவுளையும், மதத்தையும் தேர்தலில் இழுத்துப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

    அதுமட்டுமா?

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்பிட்டு, அது முஸ்லிம் லீக் கருத்து கொண்டதாக உள்ளது என்று பேசுகிறார்!

    அண்மையில் ராஜஸ்தானில், ஹிந்து வாக்கு வங்கியை குறி வைத்து, ''காங்கிரஸ் கட்சி ஹிந்து சொத்துகளை முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுக்கவே திட்டமிட்டுள்ளது'' என்றும், ''பொன் பொருளை அவர்களுக்கே பிரித்துக் கொடுப்பார்கள்'' என்று மனம் போன போக்கில் பேசி வருவது - நாளும் அவருக்கு வரும் செய்திகளின்படி, ''மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது; 400 தொகுதி என்கிற கனவு பகற்கனவாகி விடுவதோடு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் வெகுவாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்'' என்பதாலும், அவர் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் கீழிறக்கத்திற்கு ஆளாக்கிவருவது, நாட்டிற்கே ஊறுவிளைவிக்கும் தேசிய அவமானம் ஆகும்!

    மோடி, அமித்ஷாவின் (ரெய்ப்பூர்) பேச்சு முழு சட்ட மீறல், தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பிரதமர் மோடியின் மற்றொரு விசித்திர விஷமப் பேச்சு (உ.பி. காசியாபாத்தில்) - ''எனக்கு முஸ்லிம் பெண்களின் ஆசிகள் ஏராளம் உண்டு'' என்று ஒரு குடும்பத்திற்குள்ளேயே, கணவன் - மனைவி இருவருக்கிடையே பிரிவினைவாதத்தைப் புகுத்தும் மிகக் கேவலமான கீழிறக்கப் பேச்சாகும். ஒரு பிரதமர் பதவியை - அதுவும் பத்தாண்டு காலம் அப்பதவியை வகித்தவர் இப்படிப் பேசுவது, அப்பதவியின் மாண்பையே குழிதோண்டிப் புதைப்பதல்லாமல் வேறு என்ன?

    தேர்தல் ஆணையம் இவற்றைக் கண்டும் காணாததாக, கேளாக் காதுகளுடனும் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச் சட்ட அவமதிப்புக்கும் சரியான ஆதாரங்களாகும்!

    அத்தனை எதிர்க்கட்சிகளும் குறிப்பாக காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகள் இதனை நாளும் தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையையும் பிரதமர் பேச்சின்மீது இதுவரை எடுக்கவே இல்லை!

    ''சட்டத்தின்முன் அனைவரும் சமம்'' என்ற தத்துவம் ஏன் பிரதமர் பேச்சு விஷயத்தில் மட்டும் காணாமற்போக வேண்டும் - சட்டம் அனைவருக்கும் பொதுச் சட்டம்தானே!

    நாட்டில் மத வகுப்புக் கலவரங்களை வெடிக்கச் செய்யும் நிலையை ஆளும் பிரதமரே தூண்டுவதுபோல் பேசலாமா?

    எனவே, நிலைமை மேலும் மோசமாகமலிருக்க (காரணம் ஜூன் முதல் தேதிவரை ஏழு கட்டத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில்) ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட மாண்பு - அரசியல் விழுமியங்களைக் காக்கும் பெரும் பொறுப்பு - மக்களின் கடைசி நம்பிக்கையான உச்சநீதிமன்றத்திடம்தான் என்பதால், உடனடியாக முன்வந்து, பிரதமருக்குத் தாக்கீது அனுப்பி வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

    ''எதையும் பார்க்காமல் சட்டம், நீதி தனது கடமையைச் செய்தாகவேண்டும்'' என்பதை வலியுறுத்தத்தானே!

    எனவே, உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து ('Suo Moto') தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொள்வதே - நாட்டின் ஜனநாயகம் காக்க, விருப்பு வெறுப்பு அரசியல் என்ற அறத்தை விழுங்கும் அநியாய அலங்கோலம் தலைவிரித்தாடாமல் தடுக்கப்பட அதுவே ஒரே வழி!

    சட்டம் ஓரப்பார்வையோடு நடந்துகொண்டு வருகிறதே என்ற பழி நாளைய வரலாற்றுப் பழியாக மட்டுமல்லாமல், வரலாற்றுப் பிழையாகவும் ஆகிவிடக் கூடும்!

    இன்றைய எதேச்சதிகார மோடி ஆட்சியின் சட்ட இடிப்பாரை - உச்சநீதிமன்றம் போன்றவைதானே!

    மதச்சார்பற்ற நாடு என்று முத்திரை - ஆனால், தேர்தலில் ஜாதி, மத, வெறுப்புப் பிரச்சார அடைமழையாக, ''வேலியே பயிரை மேய்வது போன்று'' நாட்டின் பிரதமரே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செய்து வரலாமா?

    அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை உச்சநீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் சென்று, நீதி கேட்டு நெடிய பரப்புரைகளை அடைமழைபோல செய்ய முன்வரவேண்டும். இன்னும் 35 நாள்களும் நாட்டில் பிரச்சாரம் எவ்வளவு மோசமாகுமோ! அதற்குத் தடுப்பே இல்லையா? மவுனம் கலையட்டும் - சட்டம் கடமையைச் செய்யட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
    • ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.

    மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    • வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.

    வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

    அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
    • பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.

    கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலாரின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

    அதன்பிறகு, வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

    பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.
    • பொலிரோ நியோ, ஹோண்டா அமேஸ் மாடல்களும் பங்கேற்றன.

    கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்.பி.வி. மாடல் சமீபத்தில் குளோபல் என்கேப் (GNCAP) டெஸ்டிங்கில் பங்கேற்றது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டெஸ்டிங்கில் கரென்ஸ் மட்டுமின்றி மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களும் பங்கேற்றன.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இதே போன்ற டெஸ்டிங்கில் பங்கேற்ற போது கியா கரென்ஸ் மாடல் மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது. தற்போது மேம்பட்ட விதிமுறைகளின் கீழ் கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.

     


    இரண்டு முறை டெஸ்டிங் செய்யப்பட்ட கியா கரென்ஸ் மாடல் முதல் முறை ஒரு நட்சத்திர குறியீட்டை கூட பெறவில்லை. இந்த காரில் பயணிப்போருக்கு கழுத்து பகுதியில் அதிக காயங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் கரென்ஸ் மாடல் டெஸ்டிங் செய்யப்பட்டது. அப்போது இந்த கார் பாதுகாப்பிற்காக மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது.

    இறுதி முடிவுகளின் படி கியா கரென்ஸ் மாடல் பெரியவர்கள் பாதுகாப்பில் 34-க்கு 22.07 புள்ளிகளையும், சிறியவர்கள் பாதுகாப்பிற்கு 49-க்கு 41 புள்ளிகளையும் பெற்றது. இந்த காரில் ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லிமிட்டர்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், இ.எஸ்.சி. மற்றும் ISOFIX உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

    • தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • மாநிலத் திட்டக் குழுவானது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 'ஈரக்குமிழ் வெப்ப நிலை' பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது ( தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தை உருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதஞ்சலி நிறுவனம் 67 பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்.
    • பதஞ்சலி நிறுவனம் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அதே அளவில் தான் மன்னிப்பு கோரப்பட்டதா?

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.

    அதன்பின் ஏப்ரல் 16-ம் தேதி, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2018 முதல் தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பிராமண பாத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    குழந்தைகள், முதியவர்களுக்கான உணவுகள் குறித்து தவறான விளம்பரங்கள் வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொய் விளம்பரங்களில் எங்கே தவறு நடந்தது? - அனைத்து மாநில அரசுகளையும் வழக்கில் இணைக்கவும் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து, ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பதஞ்சலி நிறுவனம் 61 பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    பதஞ்சலி நிறுவனம் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அதே அளவில் தான் மன்னிப்பு கோரப்பட்டதா? மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    செய்தித் தாள்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் மன்னிப்புக் கேட்டு அதன் துண்டறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 30-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

    • இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.
    • கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

    புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

    புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

    கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருப்பது வழக்கம். கால சூழல் மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இயல்பைவிட அதிகமாக வெப்பம் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உடலில் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, கால்வலி போன்றவை ஏற்படும்.

    வெயில் அதிகமாக முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதாக தாக்கக்கூடும். உஷ்ணம் தாங்க முடியாமல் அவர்கள் சுயநினைவு இழக்க நேரிடும். உடலில் நீர் சத்து குறைந்து வலிப்பு ஏற்படக்கூடும்.

    சிலருக்கு வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்டோக்) பாதிப்பும் உண்டாகலாம். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    தளர்வான ஆடைகள், பருத்தி உடைகளை அணிவதில் இருந்து தப்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்லலாம். கட்டாயம் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். இதன் மூலம் நா வறட்சி, படபடப்பு, சோர்வு, உடல் அசதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், பழங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட ஜூஸ் பழ, வகைகளை சாப்பிடக்கூடாது.

    சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகம் கருப்பாக மாறிவிடும். அதனால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் கிரீம் தடவி செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை கட்டி, வேர்க்குரு போன்றவற்றை தடுக்க தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டல் உணவு நல்லதல்ல. பழைய கஞ்சி உடலுக்கு நல்லது. தற்போதைய சீசன் பழங்களை பருகலாம். தர்பூசணி, தயிர் சாதம், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்ப பக்கவாதம் சிலருக்கு உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

    வெப்ப தாக்குதலால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது.
    • இதன் அர்த்தம், யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21-ந்தேதி) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றோம். புகார் பரிசீலனையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக பிரதமர் தனது பேச்சியில் கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×