search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
    • இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்தபின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், நீதிபதி அல்லி இன்று விடுப்பு எடுத்துள்ளார்.

    இதையடுத்து இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    த.மா.கா. பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பாரதிய ஜனதா பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன், யோகி ஆதித்யாநாத் பெயர்களுடன் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், பா.ம.க. கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.

    • அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
    • போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில்நேற்றிரவு அரசு பஸ் பழுதடைந்து நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பண்ருட்டி பகுதி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இருந்து பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரெனபழுதானது.

    இதனை தொடர்ந்து நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர்.

    • கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது.
    • திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள்.

    ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமையும் போட்டியிட வைக்கவில்லை. இதற்கான உண்மையான காரணத்தை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது பா.ஜனதா. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தியும் சமூக நீதி பற்றி பேசியும் வரும் பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

    கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் திருச்சி தொகுதி மாறியது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
    • வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    சென்னை:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.

    அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.

    அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார்.
    • யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான் என்று கூறினார்.

    ரவீந்திரநாத் எம்.பி. ரவீந்திரநாத் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த போது கூறியிருப்பதாவது:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார் என்றும், தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பற்றி கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத் ஜனநாயக நாட்டியில் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான் என்று கூறினார். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

    போடி தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நிற்க வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நிற்பேன் என்று உறுதி கூறினார்.

    • கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
    • காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கோடையில் ஏற்படும் நோய்களும் பரவி வருகின்றன. சென்னையில் கோடை வெயில் காரணமாக 'அம்மை' நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    மேலும் தமிழகம் முழுவதுமே அம்மை நோய் பரவி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 350-க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் 7 பேருக்கு ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளது. மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. இது வைரஸ் பரவ சாதகமாக உள்ளது. நோயை தடுப்பதற்கான எளிதான வழி தடுப்பூசி போடுவதுதான். அனைத்து குழந்தைகளுக்கும் டாக்டர்களின் பரிந்துரைப்படி அம்மை நோய்க்கு தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வெடுக்க வேண்டும்.

    காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.மா.கா. சார்பில் வேட்பாளர் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் த.மா.கா. சார்பில் வேட்பாளர் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், வேணுகோபாலை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது சைக்கிள் சின்னத்திற்கு பதிலாக கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன், வேணுகோபாலுக்கு நீங்கள் எல்லாம் கைச்சின்னத்திலே... என்று சொல்லும் போது நிர்வாகி ஒருவர் குரல் எழுப்ப அதனை சமாளிக்கும் விதமாக வேட்பாளரை கையை நகர்த்துங்கள் என்று கூறி சமாளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகின்றனர்.

    • முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரம் செய்யும் இடங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
    • 8-ந்தேதி-தஞ்சாவூர், 9-ந்தேதி-நாகப்பட்டினம், 10-ந்தேதி-ராமநாதபுரம், விருதுநகர், 11-ந்தேதி-சிவகங்கையில் பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரம் செய்யும் இடங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி-சென்னை தெற்கு, 2-ந்தேதி-சென்னை வடக்கு, 3-ந்தேதி-காஞ்சிபுரம், 4-ந்தேதி-ஆரணி, 5-ந்தேதி-திருவண்ணாமலை, 6-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 7-ந்தேதி-திருச்சி, 8-ந்தேதி-தஞ்சாவூர், 9-ந்தேதி-நாகப்பட்டினம், 10-ந்தேதி-ராமநாதபுரம், விருதுநகர், 11-ந்தேதி-சிவகங்கை, 12-ந்தேதி-கரூர், 13-ந்தேதி-நாமக்கல், 14-ந்தேதி-சேலம், 15-ந்தேதி-மதுரை, 16-ந்தேதி-தேனி, 17-ந்தேதி-திண்டுக்கல் ஆகிய இடங்களில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரம் செய்கிறார்.

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
    • வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது.

    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

    அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பரஸ்பரம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் 2 பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேர்தல் நடைமுறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகவே இன்றளவும் இருக்கின்றது. பறக்கும் படை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

    உண்மையாகவே தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

    முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவிப்பதாக மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

     அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×