search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

    எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
    ராயபுரம்:

    மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒற்றை தலைமை குறித்து இன்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோள்படி அ.தி.மு.க.வினர் கப் சிப் என்று கட்டுப்பட வேண்டும்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்த பிளவும் இல்லை. அ.ம.மு.க. என்ற லட்டர் பேடு கட்சி அ.தி.மு.க.வுடன் மோதி மண்டை உடைந்து தேர்தலில் செல்லா காசாகிவிட்டது.

    மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இனி அ.ம.மு.க. கிடையாது. பிரிந்து சென்றவர்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் பிளவு கிடையாது. அன்று ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற பிளவு இருந்தது. ஆனால் இன்று எந்த பிளவும் கிடையாது.

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு கருத்து கூறுகிறார். அதற்கு தலைமை கழகம் விளக்கம் அளித்து அறிக்கை கொடுத்துள்ளது. கட்சி விவரங்கள் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்.

    வருகிற 12-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இருக்கிறது. அன்று பேசலாம். எதை அறையில் பேச வேண்டுமோ அதை அங்கு தான் பேச வேண்டும். அம்பலத்தில் விவாதிக்க வேண்டிய வி‌ஷயத்தை அம்பலத்தில் தான் சொல்ல வேண்டும். உட்கட்சி வி‌ஷயங்கள் இது அறையில் விவாதிக்க வேண்டிய வி‌ஷயங்கள்.

    ஒரு கோடி தொண்டர்களுக்கு மேல் உள்ள கட்சி இது. சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அம்மா மறைவுக்கு பிரச்சினைகள் வந்து ஒரு தேர்தலையே சந்தித்து அடுத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க போகிறோம். அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

    அவர் ஒரு கருத்தை கூறுகிறார். அதற்கு தலைமையும் பதில் கூறியுள்ளது. அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மதுரையில் கூட்டம் போடுவதை தவறுதலாக கூற முடியாது. கூட்டத்தை கூட்டும் அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கு உண்டு.

    கூட்டத்தை நடத்துவதால் தலைமைக்கு எதிராக நடப்பதாக சொல்ல முடியாது. கூட்டத்துக்கு பிறகு அவர், ராஜன் செல்லப்பா என்ன கருத்து சொல்கிறார் என்பதை தான் பார்க்க வேண்டும்.

    சிண்டு முடிச்சு, இட்டு கட்டி, கட்சியை உடைக்க நினைத்தால் அது நிறைவேறாத கதை. அது நடக்காது. தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. போன்ற கட்சிகள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை.

    12-ந்தேதி கூட்டம் அமைதியாக நடக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். அதன் பிறகு பொதுத் தேர்தலிலும் நாங்கள்தான் வருவோம். கவலைப்பட தேவை இல்லை. இரண்டு ஆண்டுக்கு ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது.



    ஸ்டாலின் நினைத்தாலும் சரி, எந்த எதிர்கட்சிகள் நினைத்தாலும் சரி, கனவு கண்டாலும் சரி எதுவும் நடக்கப் போவதில்லை.

    கே.சி. பழனிசாமி கொள்கை முடிவை பற்றி பேசியதால் நீக்கப்பட்டார். அவர் ஒற்றை தலைமையை பற்றி பேசவில்லை. கொள்கை முடிவைப் பற்றி பேசியதால் நீக்கப்பட்டார்.

    கட்சி ஆரோக்கியமாக இருக்கும். கட்சியை பொறுத்தவரையில் எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் உழைக்கிற தொண்டர்களுக்கு தான் இந்த கட்சியில் எதிர்காலம். ஒற்றை தலைமையை காலம்தான் முடிவு செய்யும்.

    எங்களுக்கு மானம், தன்மானம்தான் முக்கியம். பதவிக்காக பல் இளிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×