search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டி- ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து
    X

    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டி- ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து

    பாரதிய ஜனதா கூட்டத்தில் பங்கேற்ற மூத்த நிர்வாகிகள் சிலர் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை கூறியதோடு அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றனர்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணியின் படுதோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக கட்சியின் மையக்குழு கூட்டம் நடந்தது. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மையக்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, நரேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற மூத்த நிர்வாகிகள் சிலர் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை கூறியதோடு அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றனர்.

    கூட்டம் முடிந்ததும் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதித்தோம். அடுத்து வரும் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துவது பற்றியும் பேசப்பட்டது.

    நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பா.ஜனதாவின் தோல்வி தற்காலிகமானது. பிரதமர் மோடியின் மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல அறிவுறுத்த இருக்கிறேன் என்றார்.

    இதற்கிடையில் அ.தி.மு.க. - பாரதிய ஜனதா கூட்டணியை உடைக்க சிலர் முயற்சிப்பதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையில் இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அதையும் தாண்டி தேசியம், கடவுள் நம்பிக்கை போன்ற கொள்கைகளிலும் ஒத்த கருத்துக்களை கொண்டுள்ளது. மரபுரீதியாக உருவான இந்த கூட்டணியை உடைக்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.

    அதே போல் த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைத்து விட்டு பா.ஜனதா தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட உள்ளதாகவும் பரப்பப்படும் தகவலை த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் டி.என். அசோகன் மறுத்தார்.

    பா.ஜனதாவுடன் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அவர்களில் யாரையும் பா.ஜனதா தலைவர் ஆவார் என்று சொன்னதில்லை. ஜி.கே.வாசன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    வாசன் காங்கிரஸ் அமைச்சராக இருந்தபோது தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அதே நேரத்தில் தேச ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் வகையில் செயல்பட்டார். இப்போது தோல்வி அடைந்தாலும் அனைத்து தரப்பிலும் அவருக்கு இருக்கும் நல்ல பெயர் நிச்சயம் வெற்றியை தேடித்தரும் என்றார்.
    Next Story
    ×