search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கவுதம்
    X
    கைதான கவுதம்

    கரூர் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்த தம்பி கைது

    கரூர் அருகே தாயிடம் தகராறு செய்ததை கண்டித்த அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஆத்தூர் நத்தமேடு சோழியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி அம்சவள்ளி. இவருக்கு நந்தகுமார் (20), கவுதம் (19) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இதில் நந்தகுமார் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கவுதம் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு போர்வெல் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான கவுதம் தினமும் அளவுக்கு அதிகமான போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனை அவரது தாயும், அண்ணனும் கடுமையாக கண்டித்து வந்தனர். ஆனாலும் கவுதம் திருந்தவில்லை.

    இந்த நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கவுதம் தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த தாய் அம்சவள்ளி ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    ஆனாலும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட கவுதம் பணம் கொடுக்காத தாயை கையால் தாக்கியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இரவில் அங்கு வந்த மூத்த மகன் நந்தகுமாரிடம் காலையில் நடந்த சம்பவம் பற்றியும், கவுதம் தன்னை தாக்கியது குறித்தும் அம்சவள்ளி கூறி அழுதுள்ளார்.

    இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நந்தகுமார், வீட்டிற்கு வந்த தம்பியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

    ஒரு கட்டத்தில் அண்ணனை கீழே தள்ளிவிட்ட தம்பி கவுதம் அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் நந்தகுமார் நிலைகுலைந்து மயங்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    மேலும் அண்ணனை கொலை செய்த தம்பி கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலையுண்ட நந்தகுமாருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×