search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி நிற்கும் காட்சி.
    X
    சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி நிற்கும் காட்சி.

    ஜெயங்கொண்டம் அருகே விபத்து- மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சென்ற தந்தை விபத்தில் பலி

    ஜெயங்கொண்டம் அருகே இன்று காலை லாரி மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 10 பேர் காயம் அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார் (வயது 46) என்பவர் ஓட்டினார். நடத்துனராக அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் சென்னை கொரட்டூரில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ரகுபதி (67) என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

    அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த போது பஸ்சில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அனைவரும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த ஹரிகரன் (12), மகேஸ்வரி (22), பாலாஜி, அமுதா, ராஜேஸ்வரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் பலியான ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த ரகுபதி தனது மனைவி விஜயகுமாரி மற்றும் 2-வது மகள் லாவண்யா, பேத்தி மவுலிகாவுடன் தஞ்சாவூரில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். லாவண்யாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த ரகுபதி அவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தஞ்சை வந்ததாகவும் தெரியவந்தது.
    Next Story
    ×