search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி மீது போலீஸ் நிலையத்தில் புகார்
    X

    கவர்னர் கிரண்பேடி மீது போலீஸ் நிலையத்தில் புகார்

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை கவர்னர் கிரண்பேடி மீறுவதாக கூறி புதுவை பெரியகடை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி புதுவை அரசின் அன்றாட பணிகளில் தலையிடுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    அதில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, கவர்னர் அன்றாட பணிகளில் தலையிடக்கூடாது, அரசு அலுவல் பணிகள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளம் மூலமாக பகிரக் கூடாது என்று கூறியது.

    ஆனால், இந்த உத்தரவை கவர்னர் மீறுவதாக கூறி புதுவை பெரியகடை போலீசில் புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் புகார் கொடுத்துள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டு கடந்த 30.4.2019 அன்று வழங்கிய தீர்ப்பில் கவர்னர் மற்ற அதிகாரிகள், பொது மக்களின் குறைகேட்டல் என்ற பெயரில் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பொது ஊடகங்களையே பயன்படுத்த வேண்டும்.

    தனியார் வலைதளங்களின் கணினி சேவை மையங்கள் வெளிநாடுகளில் உள்ளதால் அரசு ரீதியாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் உள்ளது.

    ஆனால், கவர்னர் கிரண்பேடி தனது வலைதளத்தில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதிகாரிகளிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி வருகிறார்.

    இது, நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பிலும் கவர்னர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த புகார் மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.
    Next Story
    ×