search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேர் கைது
    X

    திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேர் கைது

    திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    பனியன் நகரமான திருப்பூரில் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிமாவட்டத்தை சேர்ந்த வாலிபர்களும் தங்கி இங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் தயாரித்து திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்த வங்கதேச வாலிபர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பூர் 15 வேலம்பாளையம், சிறுபூலுவப்பட்டி பகுதிகளில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு வங்கதேசத்தை சேர்ந்த சில வாலிபர்கள் தங்கி அப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வருவதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் அவர்களை கண்காணித்து வந்தனர். நேற்று இரவு பனியன் தொழிலாளர்கள் ஒரு இடத்தில் கூடினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு 18 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது நாங்கள் கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

    அவர்களில் சிலர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது அவர்கள் 18 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்ததால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலி ஆதார் கார்டு தயாரித்து வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாங்கள் வங்கதேசத்தில் இருந்து முதலில் கொல்கத்தா வந்தோம். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தோம். அப்போது போலி ஆதார் கார்டு தயாரித்தோம். அதன் பின்னர் ரெயில் மூலம் திருப்பூர் வந்து சேர்ந்தோம்.

    இங்கு வட மாநில தொழிலாளர்களுடன் தங்கி பல்வேறு பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தோம். போலீசார் எங்களை கண்டறிந்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கைது செய்யப்பட்ட 18 பேரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    Next Story
    ×