search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டூர்புரத்தில் வாகன சோதனை: ரூ.1½ கோடி பணத்தை வீசிவிட்டு வாலிபர் தப்பி ஓட்டம்
    X

    கோட்டூர்புரத்தில் வாகன சோதனை: ரூ.1½ கோடி பணத்தை வீசிவிட்டு வாலிபர் தப்பி ஓட்டம்

    கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூ.1½ கோடி பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரம் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராமு, போலீஸ்காரர் சக்கிவேல், ஊர்க்காவல் படை வீரர் அண்ணாசாமி ஆகியோர் கோட்டூர்புரம் லாக் தெருவில் போலீஸ் ஜீப்பில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை வாலிபர் வேகமாக ஓட்டினார். இதனால் போலீசாரின் சந்தேகம் வலுத்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளை விரட்டி சென்றனர். அப்போது அந்த வாலிபர் தான் வைத்திருந்த பையை தூக்கி வீசினார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்.

    போலீசார் விரைந்து சென்று பையை எடுத்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பணப்பையை பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பணத்தை எண்ணி பார்த்தனர். அதில் ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் இருந்தது. இந்த பணம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துச் சென்ற வாலிபர் யார்? அவர் எங்கிருந்து யாருக்காக ரூ.1½ கோடியை கொண்டு சென்றார்? என்பது தெரியவில்லை.

    ரூ.1½ கோடி பணமும் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணத்தை போட்டு விட்டு தப்பிச் சென்ற நபரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை எடுத்துச் சென்ற வாலிபரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கோட்டூர்புரம் லாக் தெருவில் நேற்று இரவு நடமாடியவர்கள் யார்-யார்? என்பதை செல்போன் தொடர்புகள் மூலம் கண்டு பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னையில் ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர். இப்படி பல கோணங்களில் மர்ம வாலிபரை பிடிக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×