search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
    X

    மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

    மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஆர்.எஸ். தங்கமாபுரிப்பட்டணம் பெரியார் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், (வயது 48).

    இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது கோபால கிருஷ்ணன் இங்கிருந்து மாற்றுப்பணிக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவு பணி முடிந்து கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அவர், பவானி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தார்.

    இரவு சுமார் 8.40 மணி அளவில் மேட்டூர் அருகே உள்ள நவப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஈச்சர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கோபால கிருஷ்ணன் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து, மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார், சம்பந்தப்பட்ட ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து, அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (34) என்பவரை கைது செய்தனர்.

    விபத்தில் பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×