search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - உண்மை கண்டறியும் குழு விசாரணை தொடங்கியது
    X

    ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - உண்மை கண்டறியும் குழு விசாரணை தொடங்கியது

    சேலம் அருகே ரவுடி என்கவுண்டரில் உள்ள சந்தேகங்களை விசாரித்து உண்மை நிலையை அறிய மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட உண்மை அறியும் குழு துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இன்று விசாரணையை தொடங்கியது. #SalemRowdy
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்தவர் சேட்டு மகன் கதிர்வேல் (32). இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    கடந்த மாதம் காட்டூர் பகுதியை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (32) கொலை வழக்கில், ரவுடி கதிர்வேலு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இவரை காரிப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    அப்போது காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கடந்த 2-ந் தேதி குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி கதிர்வேலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

    அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் துப்பாக்கியால் சுட்டதில், ரவுடி கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ரவுடியை என் கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டு, கொலையுண்ட கதிர்வேலின் ரத்தக்கறை படிந்த உடைகள், சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த ரத்த மாதிரிகள் மற்றும் கதிர்வேல் தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் உடைகள், ரத்த மாதிரிகள் உள்ளிட்ட தடயங்கள் அனைத்தும் வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோ‌ஷத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தடயங்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து உறுதிபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கதிர்வேலின் என்கவுண்டரில் சில மர்மங்கள் நிலவுவதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.

    கதிர்வேலின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரித்து உண்மை நிலையை அறிய மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட உண்மை அறியும் குழு துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இன்று விசாரணையை தொடங்கியது.

    அந்த குழுவினர் கதிர்வேல் உறவினர்கள், முறுக்கு வியாபாரி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிசாமி, முத்து மற்றும் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு, துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரி, சம்பவ இடத்தில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை இன்றும் நாளையும் நடக்கிறது.

    இந்த குழுவில் சென்னை மனித உரிமை மக்கள் கழக பேராசிரியர் மார்க்ஸ், வக்கீல் அரிபாபு உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். #SalemRowdy

    Next Story
    ×