search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரியில் இன்று காலை அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து
    X

    சூளகிரியில் இன்று காலை அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளுகிரியில் இன்று அதிகாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பள்ளியில் 1300 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 60 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முத்தையாகவுடு இருந்து வருகிறார். இன்று அதிகாலை 4 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் 6 பீரோக்களில் இருந்த மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்தினால் அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அந்த அறையை சுற்றி உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு அதிகாரி ஆனந்த் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலையில் பள்ளிவாசலுக்கு சென்ற ரிஸ்வான் என்பவர் பார்த்ததால் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். அதன் பிறகு தான் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் வெடிசத்தம்போல் கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்றும் இது நாசவேலை என்றும் அந்த பகுதி மக்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.


    இன்று அதிகாலை 4 மணிக்கு வெடிசத்தம்போல் கேட்டது. என்னவென்று வந்து பார்த்தால் பள்ளியில் தீப்பிடித்து எரிந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்தது. பள்ளி தலைமை ஆசிரியரின் அறையின் பின்புற பகுதியில் கழிவறை ஒன்று உள்ளது. அந்த கழிவறையின் வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்திருக்கலாம் அல்லது நாட்டு வெடிகுண்டுகள் வீசியிருக்கலாம் என்றும் கருதுகிறோம். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த தீ விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். தீ விபத்து நடந்த பள்ளி அறையை கல்வி அதிகாரி நாராயணன் பார்வையிட்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×