search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை வலதுகரை பகுதியில் தண்ணீர் குறைவாக உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    மேட்டூர் அணை வலதுகரை பகுதியில் தண்ணீர் குறைவாக உள்ளதை படத்தில் காணலாம்.

    மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடம் தற்போது எழுந்துள்ளது. #Metturdam
    சேலம்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணையே பூர்த்தி செய்கிறது.

    ஆண்டு தோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். முப்போக சாகுபடி பாசனத்திற்காக 330 டி.எம்.சி. (100 கோடி கன அடி) தண்ணீர் தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து பாசன நீர் தேவையின் குறையும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். வழக்கம் போல டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 36 நாட்களே உள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.21 அடியாகவும், நீர் இருப்பு 19.23 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 34.65 அடியாக இருந்தது. அணைக்கு 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சென்ற வருடம் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    நடப்பாண்டில் இந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினாலும் கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்படும் நிலை உள்ளது. அப்படி திறந்தாலும் குறித்த நாளுக்கு முன்பாகவே மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு இல்லை. எனவே இந்த ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.

    இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடம் தற்போது எழுந்து உள்ளது. ஆனாலும் தற்போது வரை மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் குறைவாக உள்ளதால் இந்தாண்டும் காவிரி பாசனத்திற்கு நீர்திறப்பு தள்ளிப்போகவே வாய்ப்புள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அணை கட்டியதில் இருந்து தற்போது வரை உள்ள 86 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 12-ந் தேதிக்கே முன்பாகவே 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இது தவிர 58 ஆண்டுகள் மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமாக இல்லாததால் குறித்த நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 109 கன அடியாகவும், அணையில் இருந்து குடி நீர் தேவைக்கு காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தற்போது மேட்டூர் அணையில் 50 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால் இன்னும் 2 மாத காலத்திற்கு அதனை நம்பி உள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என பொதுப் பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.  #Metturdam
    Next Story
    ×