search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்போல் காணப்படும் வீராணம் ஏரி.
    X
    கடல்போல் காணப்படும் வீராணம் ஏரி.

    கோடை காலத்தில் கடல்போல் காணப்படும் வீராணம் ஏரி

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உயர்ந்தது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேரும். பின்னர் வடவாறு வீராணம் ஏரியை வந்து சேரும்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் மழையின் காரணமாக 2 முறை வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணை மூலம் வீராணம் ஏரிக்கு வந்து அடைந்தது.

    இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.3 அடியாக உயர்ந்தது. சென்னைக்கு தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.

    இதையடுத்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது. இதனால் சென்னைக்கு 68 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 4-ந் தேதி 44.30 அடியாக குறைந்தது.

    இந்நிலையில் பானி புயலை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. இன்றைய நீர்மட்டம் 46.5 அடியாக உள்ளது. சென்னைக்கு 51 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    விவசாயத்துக்கு வி.என்.எஸ்.மதகு வழியாக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடைகாலத்தில் வீராணம் ஏரி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    2013-ம் ஆண்டுக்கு பிறகு கோடைகாலத்தில் வீராணம் ஏரி நிரம்பி உள்ளது. ஏரியில் தண்ணீர் குறைய, குறைய கீழணையில் இருந்து தண்ணீர் பெறப்படும். அதன்மூலம் சென்னையில் குடிநீர் தேவையை ஜூலை மாதம் வரை சமாளிக்கமுடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள். #VeeranamLake
    Next Story
    ×