search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் உள்ள நகைபணம் இருந்த அலமாரிகள் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    வீட்டில் உள்ள நகைபணம் இருந்த அலமாரிகள் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    கள்ளக்குறிச்சி அருகே பெண் அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பெண் அதிகாரி வீட்டில் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 30). இவரது மனைவி பவித்ரா (26) இவர்களுக்கு 2 வயது மகன் உள்ளான்.

    சத்தியநாராயணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பவித்ரா தனது மகனுடன் ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகண்டை தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பவித்ரா தனது மகனுடன் கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இரவில் அங்கே தங்கிவிட்டார்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் பவித்ரா வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்த அலமாரிகளை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    மேலும் கொள்ளையர்கள் வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி டி.வி.யை திருடிசென்றனர். இன்று காலை பவித்ரா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன.

    வீட்டில் அலமாரிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் கீழே கிடந்தன. உள்ளே இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது.

    மொத்தம் 5 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தது.

    இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்திலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த வீட்டில் மோப்பம் பிடித்து சற்று தூரம் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×