search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் பாலியல் விவகாரம்: வக்கீலின் பெண் உதவியாளர் ‘திடீர்’ கைது
    X

    பெரம்பலூர் பாலியல் விவகாரம்: வக்கீலின் பெண் உதவியாளர் ‘திடீர்’ கைது

    பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் வக்கீலின் பெண் உதவியாளரை போலீசார் திடீரென கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் மற்றும் சிலர், பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் பற்றி எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வரும் வக்கீல் அருளை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அ.தி.மு.க. மகளிரணியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில், பெரம்பலூர் போலீசார் வக்கீல் அருளை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் முன்னிலையில் வக்கீல் அருள் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வக்கீல் அருளை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக வக்கீல் அருள் நிருபர்களிடம் கூறுகையில், சிலரிடம் பொய்யான வாக்குறுதிகளை பெற்று, தன் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. பாலியல் சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அகற்றி விட்டதாக தெரிகிறது.

    அதில், பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஜாமீனில் வெளியே வந்த பிறகு பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை தொடர்பான மேலும் முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன், என்றார்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல் அருளிடம் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த பெண்ணின் பெயர் கலா என்று தெரிய வரவே, பெரம்பலூர் கல்லம்புதூர், அந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 3 பெண்களை பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்களின் பெற்றோர்கள், உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை விடுவித்தனர்.

    அதன்பிறகு கல்லம் புதூரைச்சேர்ந்த கலா என்கிற கலையரசி (25) என்பவரிடம் விசாரணை நடத்தினர். கலையரசியின் குரலும், ஆடியோவில் உள்ள குரலும் ஒன்றா? என்றும் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கலையரசி மீது வக்கீல் அருள் பாலியல் புகார் தொடர்பான தவறான ஆடியோ வெளியிட உதவியதாக தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி அசோக் பிரசாத், கலையரசியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் கலையரசியை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×