search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல்.
    X
    சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல்.

    என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை - சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு விசாரணை

    சேலம் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு இன்று விசாரணை நடத்தினார். #SalemRowdy #EncounterKillings
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள தேவாங்கூர் காலனியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கதிர்வேல் (வயது 27). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கடந்த மாதம் 5-ந் தேதி காட்டூரை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (32) கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சின்னனூரை சேர்ந்த முத்து (27), பள்ளப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    அவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது கணேசன் கொலையில் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன், கதிர்வேல் உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் கணேசன், உள்பட சிலர் பெண்களை வழிமறித்து ஆபாச படம் எடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தனர். அப்போது சில பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கணேசன் அப்ரூவர் ஆக மாறி நடந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தால் அவரை கொன்றதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் நேற்று காலை குள்ளம்பட்டி பிரிவு ரோடு ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.

    அப்போது கத்தியால் சுப்ரமணியன், மாரி ஆகிய 2 பேரையும் வெட்டி விட்டு கதிர்வேல் தப்பியோட முயன்றான். தற்காப்புக்காக சுப்ரமணியன் சுட்டபோது நெஞ்சில் குண்டு பாய்ந்து கதிர்வேல் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து சேலம் ஆர்.டி.ஒ. செழியன் விசாரணை நடத்துகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுப்ரமணியன், மாரியை சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு தீபா கானிகர் ஆறுதல் கூறினார்.

    அப்போது கதிர்வேல் என்கவுண்டர் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    சேலம் ஜே.எம்.3 கோர்ட் மாஜிஸ்திரேட்டு சரவணபவன் இன்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி கதிர்வேல் உடலை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்கு சிகிச்சை பெறும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் சம்பவ இடத்தில் இருந்த எஸ்.ஐ. பெரியசாமி, ஏட்டு ராஜாமணி, போலீஸ்காரர் ஜெகதீஸ் ஆகியோரிடமும் விசாரணை நடத்துகிறார். மேலும் கதிர்வேலின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த உள்ளார்.

    இன்று பிற்பகல் கதிர்வேல் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கதிர்வேல் உறவினர்கள் குவிந்து உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரெண்டு அண்ணாமலை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இன்னும் ஓரிரு நாளில் அவர் விசாரணையை தொடங்க உள்ளார். #SalemRowdy #EncounterKillings
    Next Story
    ×