search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 2 உதவி மையத்தில் பி.இ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
    X

    சென்னையில் 2 உதவி மையத்தில் பி.இ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

    பொறியியல் படிப்பில் சேருவதற்கு இன்று முதல் சென்னையில் 2 இடங்களில் உள்ள உதவி மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதுவரையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவந்த கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. பொறியியல் படிப்பில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இந்த வருடம் கூடுதலாக ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 இடங்களில் உள்ள உதவி மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தரமணி மத்திய பாலிடெக்னிக், கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உதவி மையம் செயல்படுகிறது.

    இதுதவிர காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, குரோம்பேட்டை ஜி.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை உதவி மையங்களாக செயல்படுகின்றன. ‘www.tnea online.in, www.tndte.gov.in” என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தை பதிவு செய்ய அருகில் உள்ள சேவை மையத்தை குறிப்பிட வேண்டும். அந்த மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டாம். முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளிகள் அதற்குரிய சிறப்புச் சான்றிதழ்கள் அவசியம். சான்றிதழ் சரிபார்த்தலின் போது கொண்டுவர வேண்டும்.

    பி.இ. படிப்பிற்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாளாகும். ஜூன் 6 முதல் 11-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

    தரவரிசை பட்டியலின்படி ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்கள் மாணவர்களின் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

    முதல்நாளான இன்று விண்ணப்பிக்க தொழில் நுட்ப கல்வி இயக்குனர் வளாகத்தில் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.

    தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்க உதவிசெய்ய ஒரு அறையில் இருவர் உள்ளனர். அவர்களின் வழி காட்டுதலின்படி மற்றொரு அறையில் ஆன்லைனில் பதிவு செய்ய கம்ப்யூட்டர் நிறுவப்பட்டுள்ளது.

    அங்குள்ள ஊழியர்கள் மாணவர்களிடம் தகவல் பெற்று பதிவு செய்தனர். சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள மாணவர்கள் பெற்றோர்களுடன் அங்கு வந்து விண்ணப்பித்து சென்றனர்.

    விழுப்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் அவரது மகன் சதிஷ்குமாரை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க தரமணிக்கு வந்திருந்தார். பிளஸ்-2 தேர்வில் 443 மதிப்பெண் பெற்ற சதிஷ் குமாரை பொறியியல் படிக்க வைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று விவசாயி முருகன் தெரிவித்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி இல்லை. அங்கு வரும் மாணவர்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி தரமணிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
    Next Story
    ×