search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லியில் கைதான இலங்கை வாலிபரிடம் போலி ஆதார் கார்டு
    X

    பூந்தமல்லியில் கைதான இலங்கை வாலிபரிடம் போலி ஆதார் கார்டு

    இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக பூந்தமல்லியில் கைதான இலங்கை வாலிபரிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. #SrilankanAttack
    சென்னை:

    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பூந்தமல்லியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்த இலங்கை வாலிபர் தனுகா ரோ‌ஷன் என்பவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

    இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஒ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கியூபிரிவு போலீசாரும், தனுகாரோ‌ஷனிடம் விசாரித்தனர்.

    இதன்பின்னர் பூந்தமல்லி போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் தனுகாரோ‌ஷன் பாஸ்போர்ட் விசா இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தப்பி வந்தது தெரியவந்தது.

    அவரிடம் போலி ஆதார் அட்டையும் சிக்கியது. இதனைத்தொடர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்தல், உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து பதுங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தனுகாரோ‌ஷன் மீது நடவடிக்கை எடுத்தனர்.

    5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தனுகாரோ‌ஷன் நேற்று நள்ளிரவு 10 மணி அளவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தனுகாரோ‌ஷன் கொழும்பில் செயின்ட் ஸ்பாஷின் பிளாட்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார். கொலை வழக்கில் தொடர்பு இருந்ததால் தனது பாஸ்போர்ட்டை இலங்கை அரசு முடக்கிவிட்டதாக தனுகாரோ‌ஷன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதன் காரணமாகவே கள்ளத்தோணியில் ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து சென்னை வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். குன்றத்தூர் மேத்தா நகரில் 6 மாதம் தங்கியிருந்த தனுகா ரோ‌ஷன் 3 மாதத்துக்கு முன்னாள்தான் பூந்தமல்லிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த ஷியாம் என்பவர் தனக்கு போலி ஆதார்கார்டு வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார். இதற்காக தனுகாரோ‌ஷன் தனது பெயரை சுதர்சன் என்று கூறியுள்ளார். இந்த பெயரிலேயே போலி ஆதார் அட்டையை ஷியாம் வாங்கி கொடுத்துள்ளார்.

    இவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. ஷியாமை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். #SrilankanAttack
    Next Story
    ×