search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    X
    கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சின்னசேலம் அருகே லாரி மீது கார் மோதல்- 3 பேர் பலி

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடததிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாஸ்(வயது 37), சதீஷ்(25), சுனில்(31). இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதே கம்பெனியில் சேலத்தை சேர்ந்த மகாலிங்கம்(32), அருண்குமார்(35), மன்னார்குடியை சேர்ந்த கண்ணதாசன்(37) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று மாலை ஒரு காரில் திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றனர்.

    காரை சேலத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(40) ஓட்டிசென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு மும்பை- சென்னை அணிகள் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு அங்கிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டனர்.

    காலை 5 மணியளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் காரில் இருந்த அருண்குமார், சதீஷ், கார் டிரைவர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தாஸ், மகாலிங்கம், கண்ணதாசன், சுனில் ஆகிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விபத்தில் இறந்த அருண்குமார், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×