search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் தொல்லை- தண்ணீர் தொட்டியில் குதித்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான பரிதாபம்
    X

    கடன் தொல்லை- தண்ணீர் தொட்டியில் குதித்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான பரிதாபம்

    பொள்ளாச்சி அருகே கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி (30).

    இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மோனிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.

    கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சதிஷ்குமார் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு குடி வந்தார்.

    அங்கு தங்கி இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இந்த விவசாய தோட்டத்தில் 11 அடி உயர தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் இந்த தண்ணீர் தொட்டிக்குள் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குதித்தார்.

    இதில் சதிஷ்குமாரும், குழந்தை மோனிகாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தவமணி மட்டும் கை, கால்களை அசைத்தபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது தோட்டத்துக்கு வந்த டிராக்டர் டிரைவர் தவமணி தண்ணீர் தொட்டிக்குள் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தவமணியை மீட்டார். அப்போது அவருக்கு சுய நினைவு இருந்தது.

    இந்த நிலையில் கணவன்- மகள் தண்ணீரில் குதித்து இறந்த தகவல் கிடைத்ததும் தவமணி வேதனை அடைந்தார். அவர் கண்ணீர் விட்டு தரையில் புரண்டு கதறி அழுதார்.

    வீட்டிற்குள் ஓடி சென்ற தவமணி அங்கு தென்னை மரங்களுக்கு வைக்க பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரையை தின்றார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4 மணியளவில் தவமணி இறந்தார்.

    கடன் தொல்லையால் சதிஷ்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பொள்ளாச்சியில் சதிஷ்குமார் வசித்து வந்த போது சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

    அவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சதிஷ்குமார் குடும்பத்துடன் கவுண்டம் பாளையம் வந்து உள்ளார்.

    இங்கு வந்த பின்னரும் கடன் கொடுத்தவர்கள் சதிஷ்குமார் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். நீங்கள் தங்கி உள்ள இடம் தெரிந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாமா என மிரட்டி உள்ளனர்.

    இதனை சதிஷ் குமார் தன்னுடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களிடம் கூறி வேதனை பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×