search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுக தான் காரணம்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுக தான் காரணம்- தமிழிசை சவுந்தரராஜன்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் பொய் பிரசாரம் செய்தாலும் நாட்டு மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது மூன்றாம், ஐந்தாம் கட்ட தேர்தலில் பிரதிபலிக்கும். மோடி மீண்டும் பிரதமராவார். தூத்துக்குடியில் தாமரை வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

    ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். அ.தி.மு.க. வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு. அவர்களது வெற்றிக்கு பாடுபடுவேன். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். தூத்துக்குடியில் துப்பாக்கி நடமாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்லியுள்ளார்.

    பயங்கரவாத கலாச்சாரம் எந்த விதத்திலும் தூத்துக்குடியில் தலை எடுத்து விடக்கூடாது. இன்று தி.மு.க.வை சேர்ந்தவர் தனது சகோதரரை சுட்டுக்கொன்று உள்ளார். இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.

    இதே போல் எத்தனை பேர் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. தூத்துக்குடி அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்காக தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம்.

    தூத்துக்குடி மேம்பாட்டிற்கு எனது பணி எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழகத்தில் 40 இடங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அத்திட்டத்தை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. தான். ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் 54 இடங்களில் கையெழுத்து இடும்போதும் தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த யோசனை செய்வோம் என்ற அவர் மக்களுக்கு விருப்பமில்லாத எதையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.  #BJP #TamilisaiSoundararajan #DMK
    Next Story
    ×