search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்
    X

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்

    மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அதிகாரி சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #MaduraiConstituency
    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு, அதற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தவிர அங்குள்ள ஒரு அறையில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறை சீல் வைக்கப்பட வில்லை. இந்த நிலையில் அந்த அறைக்கு அனுமதியின்றி உதவி கலால் ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் தாசில்தார் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேர் சென்று திரும்பி உள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்த மா.கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன், அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் அந்த கட்சியினர் நேற்று முன் தினம் இரவு மருத்துவக்கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேரும் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவினை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கலெக்டர் நடராஜன் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அங்கு பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். அந்த கேமரா காட்சியில், பெண் அதிகாரி சம்பூரணம் உள்பட 4 பேரும் ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று வருவது உறுதியானது.

    எனவே இது குறித்து கலெக்டர் நடராஜன், தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிக்கு அறிக்கை அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக சம்பூரணம், சீனிவாசன், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். #MaduraiConstituency

    Next Story
    ×