search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனநாயகத்தை காப்பாற்ற மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்- கே.எஸ்.அழகிரி
    X

    ஜனநாயகத்தை காப்பாற்ற மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    ஜனநாயகத்தை காப்பாற்ற மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #LoksabhaElections2019 #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திரம் பெற்ற 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அந்த வகையில் கடந்த 2004 முதல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மகத்தான சாதனைகளை புரிந்தது. அத்தகைய சாதனைகளை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குங்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.

    அந்த தேர்தல் அறிக்கை ஒரு அறையில் கூடி தயாரிக்கப்பட்டதல்ல. தனிப்பட்ட நபரின் குரலாக இல்லாமல் மக்களின் குரலாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் கூறப்பட்ட பல வாக்குறுதிகள் நாட்டு மக்களிடையே நம்பகத்தன்மையையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

    கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்திருப்பதால் புதிதாக தொழில், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உருவாக்கப்படும். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தற்போது காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்கள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகிறது.

    இந்தியாவின் முதுகெலும்பாக 70 சதவீத மக்கள் சார்ந்திருக்கிற விவசாயத்திற்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம் முழுமையான பலன்கள் தருகிற வகையில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி துவக்கப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்கிற வகையில் அமைந்திருக்கிறது. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். 1 முதல் 12-ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் திருத்தம் கொண்டு வரப்படும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உயர்த்தப்படும்.

    தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற வகையில் நீட் நுழைவுத் தேர்வு 2017, 2018-ம் ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளால் திணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலன்களை பாதுகாக்கிற வகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதே போல, பாராளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கு சோனியா காந்தி முயற்சியால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரிக்காத காரணத்தால் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகிறது.

    அரசு வேலை வாய்ப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். 1976-ல் கொண்டு வரப்பட்ட சம ஊதிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். இவையெல்லாம் பெண்ணுரிமையை காப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

    ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகத் தூண்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது.

    அதை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்கால பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். அதே போல, தமிழகத்தின் முதல்- அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட வேண்டிய நாள் ஏப்ரல் 18. தமிழக வாக்காளப் பெருமக்கள் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொள்வதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #LoksabhaElections2019 #Congress #KSAlagiri
    Next Story
    ×