search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி - கூடங்குளம் அணுமின் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம்
    X

    எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி - கூடங்குளம் அணுமின் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம்

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமச்சந்திரன் என்பவர் சப்-காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் புளியம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் (வயது36). என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் இவர் அங்குள்ள எந்திரத்தில் வால்வுகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் எந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இன்பராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே இன்பராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இன்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     


    இதுதொடர்பாக கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த இன்பராஜுக்கு ஜெபா அன்ன பூர்ணம் என்ற மனைவியும், ஜெபிஷா, ஏஞ்சல் என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே இன்பராஜின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.

    அணுமின் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலியான இன்பராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்திற்கு ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அணுமின் நிலைய நுழைவு வாயிலில் போராட்டம் நடந்ததால் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதுகாப்பாக செல்ல அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×