search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம்?- ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
    X

    நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம்?- ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

    22 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம்? என கேள்வி எழுப்பினார். #Loksabhaelections2019
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு பிரசாரம் செய்தார்.

    1998 இல் திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றுள்ளேன். அப்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி திருசெங்கோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வாக்கு கேட்ட இடத்தில் இப்போது தமிழக முதல்வராக வந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பிரதமராக வருவதற்கு தனித்தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரு வலிமை மிகுந்த பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளர் மதிமுக உறுப்பினரா? அல்லது திமுக உறுப்பினரா? என்பதை வைகோ விளக்க வேண்டும். கூட்டணிக்காகக் கொள்கையை விட்டு விட்டார். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுயமரியாதை கட்சிகள். ஏனெனில் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன.

    வைகோவுக்காக எத்தனை பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதையெல்லாம் நினைக்காமல் தன்னுடைய சுய லாபத்துக்காக, பதவிக்காக வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அந்த கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த வைகோ இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்? இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து பேசிய வைகோ இப்போது அதுகுறித்து பேசுவதில்லை. மதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திமுக தான். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, நான் பிரதமராக பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார்.

    அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை கலைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காக ராகுல் காந்தியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

    மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என கூறுகிறார். நாங்கள் என்ன அவ்வளவு மோசமான நிலையிலா இருக்கிறோம்? முதல்வராக வேண்டும் அவர் கனவு எப்போதும் நிறைவேறாது. தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நான் கிளைச்செயலராக இருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்து இப்போது முதல்வராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தை நிழலில் இருந்து கட்சிக்கு தலைவராகி இருக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை. தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு முதல் அமைச்சர் எட்பபாடி பழனிசாமி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து சூளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உடன் இருந்தனர். #Loksabhaelections2019 #Edappadipalaniswami #MKStalin
    Next Story
    ×