search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்து சென்ற பெண்கள்.
    X
    வேலூரில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்து சென்ற பெண்கள்.

    வேலூரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது

    தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது. #Summer
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும்.

    வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் வெயில் அளவு அதிகரித்து, மே மாத இறுதியில் உச்சத்தை தொடும். அந்த சமயத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும். ஆனால் இந்தாண்டு கடந்த மாத இறுதியில் இருந்து தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.

    காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சம் அடைகிறது. கடுமையான வெயில் அனல் காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வேலூரில் நேற்று வெயிலின் அளவு இதுவரை இல்லாத வகையில் 106.5 டிகிரி கொளுத்தியது. இதனால் வேலூரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    பகலில் அடித்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்தது. மின்விசிறிகள் அனல்காற்றை கக்கியது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது.

    கரூர் பரமத்தியில் 105 டிகிரியும், மதுரை விமான நிலையம், மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணியில் 104 டிகிரியும், சேலம், நாமக்கலில் 103 டிகிரியும், தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோயம்புத்தூரில் 100 டிகிரியும் வாட்டியுள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் இன்று வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

    குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்றும் அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #Summer

    Next Story
    ×