search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிப்போம்- காதர் முகைதீன்
    X

    தேர்தல் ஆணையம் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிப்போம்- காதர் முகைதீன்

    தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு புகார் மனுவினை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளதாக காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் முகைதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. அனைத்து விதத்திலும் தோல்வியுற்ற கட்சி. அதற்கு அவர்களின் தேர்தல் அறிக்கை உதாரணமாக உள்ளது. 2014ல் கூறிய அத்தனையும் இடம் பெற்றுள்ளது. அதில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்பது கண்டிக்கத்தக்கது. ராமர் கோவில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டுவோம் என்றுள்ளனர். இது நீதிமன்றத்தை உதாசினப்படுத்துவது. கோவில் கட்டுவது அரசு வேலை அல்ல.

    தற்போது ரபேல் விமான பிரச்சனையை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுவே அவர்களின் பொய்களுக்கு சான்றாகும். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ராகுல் தலைமையிலும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலும் நல்லாட்சி அமையும். பழைய நல்லிணக்க இந்தியாவாக தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

    பா.ஜ.க. வைரஸ் கிருமி போல் பரவியுள்ளது. அந்த வைரஸ் கிருமியை அழிக்கும் ஆண்டிடோட்டல் நாங்கள். இந்தியாவிற்கு எதிரான கட்சி பி.ஜே.பி., தற்போது அனைத்து துறையினரும் அதனை எதிர்க்கிறார்கள்.

    இந்தியாவின் தேர்தல் ஆணையம் உலக அளவில் தலை சிறந்தது‌. ஆனால் வருமான வரித்துறையை ஏவி எதிர்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு புகார் மனுவினை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம். தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலை உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LoksabhaElections2019
    Next Story
    ×