search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி தொகுதியில் மோடி - ராகுல் போட்டி பிரசாரம்
    X

    தேனி தொகுதியில் மோடி - ராகுல் போட்டி பிரசாரம்

    பிரதமர் மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    தேனி:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

    வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடந்தது. மார்ச் 29-ந்தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 845 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 65 பேர் பெண்கள் ஆவார்கள்.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இடையே 5 முனைப்போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர். அதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துள்ளார்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் பிரசாரம் நடத்தி வருகிறார்.

    இதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தலைவர்கள் தங்களது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் 2-ம் கட்ட பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வர உள்ளனர். தற்போதைய தகவல்படி மோடி 2 தடவையும், ராகுல் ஒரு தடவையும் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.

    மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள்.

    இதனால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதோடு அங்கு தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. வெற்றியை தட்டிப் பறிக்க 3 வேட்பாளர்களிடமும் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்காக தேனி நகர் பைபாஸ் ரோடு புது பஸ்நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராகுல்காந்தி பேசுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ராகுல் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் அடுத்த நாளே அதாவது 13-ந் தேதி பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற அ.தி.முக. வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல், ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இதற்காக ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி பிரசாரம் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi

    Next Story
    ×