search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது- ராமதாஸ்
    X

    தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது- ராமதாஸ்

    அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளதால் தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தேர்தல் பிரசாரத்தில் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss
    மேச்சேரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை ஆதரித்து மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இந்த கூட்டணியைப் பார்த்து தி.மு.க. தலைவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் என்னையும், தமிழக முதல்வரையும் கடுமையாக தரம் தாழ்த்தி பேசுகிறார். தி.மு.க.வுக்கு இது கடைசி தேர்தல். இனி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற முடியாது.

    கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதேபோலத்தான் இந்த தேர்தலிலும் தி.மு.க. தோல்வி அடையும். பா.ம.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் என்னை திட்டுகிறார்.

    அ.தி.மு.க. மெகா கூட்டணிக்கு 23 கட்சிகளும், 450 சமுதாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 40-ம் நமதே, 18 இடைதேர்தலிலும் வெற்றி நமதே.

    தி.மு.க.வின் கனவு ஒரு நாளும் பலிக்காது. மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு நிறைவேறாது. சினிமாவில் வேண்டுமானால் முதல்-அமைச்சர் நாற்காலியில் உட்காருவது போன்று நடித்துக் கொள்ளலாம். மெகா கூட்டணி அமைத்துள்ளதால் தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. உலக அளவில் 4 விருதுகள் வாங்கி உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார். இதற்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். மேட்டூர் அணை நிரம்பும் நேரங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுவோம்.

    தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

    மாம்பழத்துக்கு சிறப்பு உள்ளது. இரட்டை இலையுடன் கூடிய மாம்பழம் உள்ளதை வயதானவர்கள் பார்த்தால் ஓட்டுப்போடுவார்கள். விவசாயிகள் தான் கடவுள் என பாராளுமன்றத்தில் பேசியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். எதிர்அணியின் வேட்பாளரை டெபாசிட் இழக்கும் அளவுக்கு மகத்தான வெற்றியை அன்புமணிக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss
    Next Story
    ×