search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தை மோடி வஞ்சித்து விட்டார்- டிடிவி தினகரன் கடும் தாக்கு
    X

    தமிழகத்தை மோடி வஞ்சித்து விட்டார்- டிடிவி தினகரன் கடும் தாக்கு

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தை மோடி வஞ்சித்து விட்டதாக கரூர் தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார். #LoksabhaElections2019 #TTVDhinakaran #PMModi #Jayalalithaa
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு திறந்த வேனில் நின்றபடி வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி.யால் சிறு-குறு தொழில்கள் நலிவடைந்து 6 லட்சம் குடும்பங்கள் வேலையிழந்துள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    ஏற்கனவே வறட்சி, இடு பொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது என அவதிப்படும் விவசாயிகளுக்கு இந்த திட்டங்கள் கூடுதல் சுமையாக இருக்கிறது. இவற்றையெல்லாம் பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்லில் மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.

    தற்போது மோடியுடன், எடப்பாடி பழனிசாமியும் -பன்னீர்செல்வமும் கூட்டு வைத்துள்ளனர். இந்த தேர்தல்கள் வாயிலாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அகற்றப்படுவது உறுதி. பா.ஜ.க., ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை சோமாலியாவாக மாற்றி விடுவார்கள்.

    2014-ல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோடி ஆட்சியை பிடித்தார். அப்போது தமிழகத்தில் மட்டும் பெரும்பான்மையாக ஜெயலலிதாவால் அ.தி.மு.க. 37 இடங்களை பெற்றது. அவர் இருந்தவரை தமிழகத்தில் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழகத்தை வஞ்சித்து விட்டனர். கஜா புயல் பாதிப்பு, 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது போன்றவற்றுக்கு ஆறுதல் சொல்ல தமிழகத்திற்கு மோடி ஏன் வரவில்லை? என பரவலாக மக்கள் கேட்கின்றனர். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் அ.ம.மு.க., தான் துணிச்சலுடன் தனியாக நின்று வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இருட்டில் செல்ல பயப்படுகிறவர்கள் உடன் 4 பேரை அழைத்து செல்வது போல தான் தி.மு.க. கூட்டணி உள்ளது. அந்த கட்சிகளுக்குள்ளேயே கொள்கை முரண்பாடு இருக்கிறது. கேரளாவில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். மத்தியில் தேசிய கட்சிகள் பெரும்பான்மை பெறாது. எனவே தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #TTVDhinakaran #PMModi #Jayalalithaa
    Next Story
    ×