search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை - கனிமொழி எம்.பி. பிரசாரம்
    X

    50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை - கனிமொழி எம்.பி. பிரசாரம்

    10-ம் வகுப்பு படித்த 50 ஆயிரம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலைக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கனிமொழி பிரசார கூட்டத்தில் கூறியுள்ளார்.
    நெல்லை:

    நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது நடைபெறும் தேர்தல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது போல் இது 2-வது சுதந்திர போராட்டம் ஆகும். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், இந்தியாவில் தற்போது சந்திக்கும் தேர்தல் கடைசி தேர்தலாக அமைந்து விடும்.

    பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லும். மொழி, மதம், இனம், சாதி என ஏதாவது ஒரு வழியில் நம்மிடம் பிரிவினையை உருவாக்கி, அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை தொடர முயற்சி செய்யும். பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட நாம் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் வேளையில் இந்தியா முழுவதும் ஒரே மொழி, ஒரே மதம் என்று மாற்ற துடிக்கிறார்கள். இதற்கு வாய்ப்பு வழங்கினால் நமது மண்ணின் அடையாளத்தை துடைத்து எறிந்து விடுவார்கள். அந்த எச்சரிக்கை உணர்வோடு சிந்தித்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் 50 நாட்களில் கருப்பு பணம் ஒழியும் என்று மோடி கூறினார். ஆனால் 50 நாட்களில் வங்கி வாசலில் காத்திருந்த 122 பேர் செத்து மடிந்தனர். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. மக்கள் விரோத செயல்களை செய்து வரும் மத்திய பாரதிய ஜனதா அரசின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல், தங்களை பாதுகாக்க அ.தி.மு.க. அரசும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். பெண்ணின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் அவர்கள் பொள்ளாச்சியில் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக, குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, மக்களுக்கு எதிராக மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு, சுயநல ஆட்சிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வண்ணம் ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். 10-ம் வகுப்பு படித்த 50 ஆயிரம் மகளிர் மக்கள் நலப்பணியாளராக பணி, மத்திய, மாநில அரசு அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவையெல்லாம் நிறைவேற்றிட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi
    Next Story
    ×