search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை - பள்ளி மாணவர் உள்பட 6 பேரிடம் விசாரணை
    X

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை - பள்ளி மாணவர் உள்பட 6 பேரிடம் விசாரணை

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிளஸ்-2 மாணவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை சிறுமியின் பெற்றோரிடம் கூறிய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதை வீடியோ மூலம் காட்டினர். விரைவில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று, சிறுமியின் உடலை பெற்றுக் கொண்டனர்.

    இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

    மேலும், நள்ளிரவில் செல்போனில் பேசியவர்களின் பட்டியல் சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் கொலை(302), பாலியல் வன்புணர்ச்சி(376ஏ) மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிபட்ட 6 பேரிடமும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    சிறுமி படித்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு முன்பு யாரேனும் மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி சிறுமிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டிருந்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, தனிப்படை போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை நிலவரத்தை சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளார். #GirlHarassment

    Next Story
    ×