search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு பணம் கொடுப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது - சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் தகவல்
    X

    ஓட்டுக்கு பணம் கொடுப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது - சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் தகவல்

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியன் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தேர்தல் கமி‌ஷன் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    2009-ம் ஆண்டு தேர்தலில் இருந்தே தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் அதிக அளவில் வன்முறை கலவரங்கள் நடந்து வருகின்றன.

    மேலும் அந்த காலக்கட்டத்தில் இருந்து ஓட்டுக்கு பணம் கொடுக்கும் மோசமான நிலைமை உள்ளது. இது தேர்தல் காலத்தில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

    இதை தடுப்பதற்கு தேர்தல் கமி‌ஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனை நடத்துகிறார்கள். செலவின கண்காணிப்பு அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்.

    மேலும் இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு நீதிபதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் இவ்வாறு ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. இதை தொடர் நடவடிக்கையாக செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

    அதற்கு பதில் அளித்த தேர்தல் கமி‌ஷன் வக்கீல் ‘‘எங்கள் பாதையில் இந்த பணிகளை செய்வதற்கு போதிய ஆட்கள் பலம் இல்லாமல் வருவதால், வருமானவரித்துறை, போலீஸ்துறை ஆகியவற்றை நம்பித்தான் இருக்க வேண்டியது உள்ளது.

    மேலும் தேர்தல் முடிந்ததும் எங்களுக்கான அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று கூறினார்.

    மேலும் இன்னொரு பொதுநல மனு தொடர்பாக விளக்கம் அளித்த நீதிபதி ராஜகோபாலன் ‘‘பிளாஸ்டிக் பொருட்களை பிரசாரத்துக்கு பயன்படுத்துவது, பிளக்ஸ் போர்டுகள் பயன்படுத்துவது போன்றவற்றுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை தடுக்க பல சட்ட விதிமுறைகளும் உள்ளது’ என்று கூறினார். #ChennaiHighCourt
    Next Story
    ×