search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல்
    X

    கோவை மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல்

    கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ParliamentaryElections
    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 6 நிலையான கண்காணிப்புகுழுக்களையும், பறக்கும் படைகளையும் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 43 லட்சத்து 57 ஆயிரத்து 540 மற்றும் 64 பட்டுச்சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதில் உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டதில் 2 பேரிடம் ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 500 விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.1 கோடியே 38 லட்சத்து 10 ஆயிரத்து 40 சம்பந்தப்பட்ட கருவூலகத்திலும், மேலும் 1076 மதுபாட்டில்களும், ஒரு ஏர்பிஸ்டல் கைப்பற்றப்பட்டு போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலந்தாவளம் நாச்சிபாளையம் ரோட்டில் குமிட்டிபதி பகுதியில் பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் இருந்தது. விசாரணையில் காரில் வந்தவர் கேரள மாநிலம் பாலக்காடு வெண்ணக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், வெற்றிலை வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தாராபுரம் கண்ணன் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.53 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நீலாம்பூர் சோதனை சாவடி பகுதியில் செந்தில் குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். வந்தனர். அப்போது சேலத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்தனர். காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 133 பட்டுப்புடவைகள் இருந்தது. காரை ஓட்டிவந்த திருச்சூரைச் சேர்ந்த தேவதாசை விசாரித்த போது அவர் கொண்டுவந்த பட்டுப்புடவைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிய வந்தது.

    அதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் சூலூர் தாசில்தார் ஜெயராஜிடம் ஒப்படைத்தனர். கருமத்தம் பட்டியைச் அடுத்த பதுவம் பள்ளி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் தலைமையிலான தேர்தல் செலவினப்பார்வையாளர் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த பசூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.84 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். #ParliamentaryElections
    Next Story
    ×