search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு எலுமிச்சம் பழம் ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் - பக்தர்கள் போட்டி போட்டு எடுத்தனர்
    X

    ஒரு எலுமிச்சம் பழம் ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் - பக்தர்கள் போட்டி போட்டு எடுத்தனர்

    ஒட்டனந்தல் ரத்னவேல் முருகன் கோவிலில் நடந்த திருவிழாவில் பூஜை செய்த எலுமிச்சம் பழங்களை பக்தர்கள் போட்டா போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
    அரசூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்னவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின்போது பூஜை செய்த எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், இரவில் சாமி வீதி உலாவும் நடந்து வந்தது.

    விழாவின் முதல் 9 நாட்கள், முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது தினசரி ஒன்று வீதம் மொத்தம் 9 எலுமிச்சம் பழங்களை குத்தி வைப்பார்கள். பின்னர் அந்த பழங்களை பத்திரமாக எடுத்து வைத்து பூஜை செய்வார்கள். இந்த பழச்சாற்றை குழந்தையில்லாத தம்பதியினர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி 9 நாட்களும் வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. விழாவின் 11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12.45 மணி வரை இடும்பன் பூஜை நடைபெற்றது. அப்போது இடும்பன் சாமிக்கு கருவாடுசோறு படையல் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் 9 எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் தலைவர் பாலகிருஷ்ணன், மரத்தினால் செய்யப்பட்ட ஆணி செருப்பில் நின்றபடி இந்த எலுமிச்சம் பழங்களை ஏலம் விட்டார்.

    இதனை ஏலம் எடுப்பதற்காக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, சென்னை, திருச்சி, புதுச்சேரி, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான குழந்தையில்லாத தம்பதியினர் கோவிலுக்கு வந்திருந்தனர். அதுபோல் வியாபாரிகள், வீடு கட்ட முயற்சி செய்பவர்கள், தொழில் செய்ய முனைவோர்களும் வந்திருந்தனர்.

    ஏலம் தொடங்கியவுடன் முருகனின் வேலில் திருவிழாவின் முதல் நாளன்று குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. இதனை ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதனால் ஏலத்தொகை உயர்ந்து கொண்டே போனது.

    முடிவில் அந்த எலுமிச்சம் பழத்தை விழுப்புரத்தை சேர்ந்த ஜனார்த்தனன்- வெனிஷா தம்பதியினர் அதிகபட்ச தொகையாக ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.

    இதேபோல் 2-ம் நாள் திருவிழாவின்போது வேலில் குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு- பானுப்பிரியா தம்பதியினர் ரூ.22 ஆயிரத்துக்கும், 3-ம் நாள் பழத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்- சசிகலா தம்பதியினர் ரூ.19 ஆயிரத்துக்கும், 4-ம் நாள் பழத்தை பெங்களூரு ஆனந்தன்- சத்யா தம்பதியினர் ரூ.8 ஆயிரத்து 100-க்கும், 5-ம் நாள் பழத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுளாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி- சூர்யா தம்பதியினர் ரூ.16 ஆயிரத்துக்கும், 6-ம் நாள் பழத்தை மண்டகமேடு கிராமத்தை சேர்ந்த ரத்தினம்-தேவி தம்பதியினர் ரூ.10 ஆயிரத்துக்கும், 7-ம் நாள் பழத்தை திருமுண்டீச்சரத்தை சேர்ந்த முத்துராஜ் ரூ.21 ஆயிரத்துக்கும், 8-ம் நாள் பழத்தை மேட்டுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன்- நித்யா தம்பதியினர் ரூ.9 ஆயிரத்துக்கும், 9-ம் நாள் பழத்தை பெங்களூரு அருகே உள்ள பெல்காம் காண்டேஸ்புரம் பகுதியை சேர்ந்த ராவ்சாகிப்- ரூபாதேவி தம்பதியினர் ரூ.9 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தனர்.

    இவர்களில் முத்துராஜ் மட்டும் தனக்கு திருமணம் நடைபெற வேண்டி எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்துள்ளார். மற்றவர்கள் குழந்தை பேறுக்காக எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்துள்ளனர். ஆக மொத்தம் 9 நாள் திருவிழாவின்போது பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் கடந்த ஆண்டுகளில் எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து வேண்டிய வரம் கிடைத்தவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கருவாடு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    Next Story
    ×